வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது!
70 வயதைக் கடந்த முதியவர் சிவசாமி சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வெளியே போவோர் வருவோரை எல்லம் வேடிக்கை பார்த்தவாறு இருந்தார் . அவரது மனைவி கமலாம்மா அவரது தலைக்கு பின்னால் உட்கார்ந்து ராமாயணத்தை படித்துக் கொண்டிருந்தார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் அவர்களின் மகன் சரவணன் தனது மடிக்கணிணியில்(Laptop) ஏதோ மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தார்.
திடீரென ஒரு புறா முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.அதை கமலாம்மாவும் கவனிக்கத் தவறவில்லை.. புறாவைப் பார்த்து விட்டு மெதுவாக தன் தலையைத் திருப்பி தன் மனைவி கமலாவை ஒரு சிறு புன்சிரிப்போடு பார்த்தார் சிவசாமி ! பதிலுக்கு கமலாம்மாவும் சிரிக்க,மீண்டும் திரும்பி அந்த புறாவைப் பார்த்து
“என்ன இது?” என்று கேட்டார் .மடிக்கணிணியிலிருந்து கண்களை விலக்கிய சரவணன் சொன்னார், “அது ஒரு புறா ”
சில நிமிடங்கள் கழிந்தன. சிவசாமி மீண்டும் கேட்டார், “என்ன இது?”
“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு புறா” என்றார் சரவணன்.சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”
சற்று எரிச்சலான குரலில் சரவணன் பதிலளித்தார், “அய்யோ அது ஒரு புறாப்பா, புறா புறா!”
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”
சரவணனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை தடவை தான் சொல்லித் தொலைக்குறது, ‘அது புறா என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா? வயசானாலும் ஆச்சு,உங்களுக்கு சுத்தமா காது கேக்கவே மாட்டேங்குது..வேலைக்காரனை கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வாங்கனாலும் கேக்காம, ஏன் என் உசிரை வாங்குறீங்க”
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, சிவசாமி முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை.
டேய் சரவணா!- கமலாம்மா!
என்னம்மா?உனக்கும் அது என்னனு தெரியனுமா?பொரிந்து தள்ளினார் சரவணன்.
” இந்தா இதைப்படி “!–ஒரு நாட்குறிப்பின் குறிப்பிட்ட பக்கத்தை காட்டி கொடுத்துவிட்டு சென்று அமர்ந்து கொண்டார் கமலாம்மா
அது தந்தை சிவசாமியின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
“எனது சின்னஞ்சிறு மகன் சரவணன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு புறா வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 17 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு புறா’ என்று நான் 17 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.சரவணன் வேகமாக நிமிர்ந்து பார்த்தார், தந்தை சிவசாமியை காணவில்லை!
அம்மா, அப்பா எங்க?- தழு தழுத்த குரலில்,சரவணன்.
கமலாம்மா எதுவும் பேசவில்லை!
வேகமாக வெளியே சென்று பார்த்தார் , கோலை ஊன்றி மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்த சிவசாமி தெரு முனையைத் தாண்டி இருந்தார்!
No comments:
Post a Comment